கல்வி மட்டும் போதாது!

கல்லா தவரும் கருத்தறி காட்சியை
வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணுகி லாரே. – (திருமந்திரம் – 310)

விளக்கம்:
கல்லாதவர் சிலரும் தமது மனத்தில் இறைவனின் காட்சியை உணருகிறார்கள். அதே போலக் கற்றவர்கள் எல்லோருக்குமே இறைவன் காட்சி தந்து விடுவதில்லை. அருட்கண்களை உடைய அந்த சிவபெருமானைத் தியானித்தும், உண்மையான நெறியைப் பற்றியும் நிற்பவர்களுக்கு அந்த இறைவன் காட்சி தருகிறான். அப்படி இல்லாதவர்கள் கற்றவர்கள் ஆனாலும், அவர்களுக்கு அந்த காட்சி இன்பம் கிடைப்பதில்லை.

உணர்ந்தால் வருவான்

வைத்துணர்ந் தான்மனத் தொடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன்று ஒவ்வாது
அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர்ந் தார்க்கே நணுகலு மாமே. – (திருமந்திரம் – 309)

விளக்கம்:
சிவபெருமானை நாம் மனத்தில் வைத்து உணர வேண்டும். வாயினால் அவன் புகழ் பேசி அவனுடன் ஒன்ற வேண்டும். அந்தப் பெருமான் பல வேறுபட்ட உருவங்களில் இருக்கிறான். நம் உயிர் என்னும் அச்சாணி, உலக வாழ்க்கையில் சிக்கி எவ்வளவு கலங்கினாலும், அந்த ஆதிப்பிரானை விரும்பி உணர்வோம். அவன் நம்மிடம் நெருக்கமாக இருப்பான்.

தன்னை உணர்ந்தவர்க்கு அருள்வான்

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே. – (திருமந்திரம் – 308)

விளக்கம்:
இந்த உலகில் மிகப் பழமையானவன் நம் ஈசன். பழமையான அந்தக் கடவுள் தன்னைத் துதிப்பவரிடம் நெருங்கி வருவான். தன்னை இகழ்வோர்க்குத் துன்பத்தின் இடமாய் இருப்பான். மகிழ்ந்து நின்று அந்த சிவபெருமானின் பெருமையை ஓதி உணர்வோம். அவன் பெருமையை உணர மறுப்பவர்களுக்கு அந்த சிவன் கற்பசு போலாவான்.

கல்லினால் செதுக்கப்பட்டப் பசு பால் தருவதில்லை. அது போல தன்னை உணராதவர்க்கு அந்த சிவபெருமான் அருள் செய்ய மாட்டான்.

(இடும்பை – துன்பம், கழிய நின்றார் – விலகி நின்றார்)

சிவனடியை நினைத்தால் பிறவி நீங்கும்

உறுதுணை யாவது உயிரும் உடம்பும்
உறுதுணை யாவது உலகுறு கேள்வி
செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே. – (திருமந்திரம் –307)

விளக்கம்:
நம்முடைய உடலும் உயிரும் ஒன்றுக்கொன்று துணையாய் இருக்கின்றன. அப்படி இரண்டும் இணைந்து நாம் வாழ்வதற்குத் துணையாய் இருப்பது, உலகியல் வாழ்க்கை பற்றிய நம்முடைய கேள்வி ஞானம். அதற்கு மேலும் சிறந்த துணையாய் இருப்பது சிவனடி குறித்த நமது சிந்தனை. பெறுவதற்கு அரிய அந்த சிவனடியை அடையும் வழியைக் கேட்டுத் தெரிந்து கொண்டால், நாம் அடுத்து பிறவி இல்லாத நிலையை அடையலாம்.

சுட்டிக்காட்ட முடியாத அவன் – இறைவன்!

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவராவார் அன்றே. – (திருமந்திரம் –306)

விளக்கம்:
சிறுவர்கள் விளையாடும்போது மணல் சோறு சமைத்து அதில் நிறைவு பெறுவது போல், உலக விஷயங்களின் போகத்தினால் இன்பம் உண்டு என நினைப்பவர் பலர் உண்டு. அவர்கள் ‘இது தான் இறை என்று சுட்டி அறிய முடியாத’ அந்த இறைவனைக் குறித்துத் துதிக்காதவர். அவர் உண்மையான ஆனந்தத்தை அறியவில்லை, தம்முடைய ஆன்ம சொரூபத்தையும் அறிந்திருக்கவில்லை.

குறியாதது ஒன்று – சுட்டி அறிய முடியாத ஒன்று. இரண்டு வார்த்தைகளில் கடவுளைப் பற்றிய  ஒரு நுண்மையான விளக்கம்.

error: Content is protected !!