நன்மையும் தீமையும் சேர்ந்தது தான் உலகம்!

நாதன் ஒருவனும் நல்ல இருவருங்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே. – (திருமந்திரம் – 408)

விளக்கம்:
நன்மைகளையும் தீமைகளையும் கூட்டிக் குழைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த உலகம். நன்மை தீமைகளைக் கூட்டிக் குழைப்பவர்கள் தலைவனாகிய சிவபெருமான், பிரமன், திருமால் ஆகியோர் ஆவர். பிரமனும் திருமாலும் ‘எனக்கு அடுத்து என்ன வேலை?’ என்று சிவபெருமானிடம் கேட்டு ஆர்வத்தோடு தமது தொழிலைச் செய்கிறார்கள். நமது ஆதிக்கடவுளும் அவர்கள் இருவரையும் வழி நடத்துகிறார்.

சிவசக்தியரின் தலைமை கொண்ட அமைப்பு!

ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழுந் துடைப்பதும்
ஓராய மேஉல கோடுயிர் தானே. – (திருமந்திரம் – 407)

விளக்கம்:
சிவசக்தியரின் தலைமையில் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோரைக் கொண்ட அமைப்புத் தான் உலகின் அனைத்துக்கும் காரணமாகும். ஏழு உலகங்கள் தோன்றுவது இந்த அமைப்பினால் தான். ஏழு உலகங்களும் காக்கப்படுவதும் இந்த அமைப்பினால் தான். உலகேழும் அழிக்கப்படுவதும் இந்த சிவசக்தியரின் தலைமை கொண்ட அமைப்பினால் தான். உலகின் சீவன்களுக்கெல்லாம் உயிர்களைப் பொருத்துவது இந்த அமைப்புத் தான்.

எங்கேயும் போய் தேட வேண்டியதில்லை!

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்று
நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே. – (திருமந்திரம் – 406)

விளக்கம்:
நம் உடலும் உயிரும் இசைந்திருக்க ஒரு தன்மை தேவை. அந்தத் தன்மையைக் கொடுக்கும் நந்தியம்பெருமானை நாம் எட்டுத் திசைகளிலும் தேடுகிறோம். நம் பெருமான் நம் மனத்துள்ளே தான் வசிக்கிறான். வெளியே எங்கேயும் தேட வேண்டியதில்லை. நம் மனத்துள் வசிக்கும் பெருமானை நோக்கி அக வழிபாடு செய்வதை நாம் வழக்கமாகக் கொள்வோம்.

error: Content is protected !!