பிராணாயாமத்தில் மனம் பொருந்தி இருக்க வேண்டும்

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே – 729

விளக்கம்:
பிராணாயாமத்தில் வலது பக்க மூச்சை நூற்று அறுபத்து ஆறு மாத்திரை அளவும், இடது பக்க மூச்சை நூற்று அறுபத்து ஆறு மாத்திரை அளவும் மாற்றி மாற்றிப் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சியின் போது ஒவ்வொரு நூற்று அறுபத்து ஆறு மாத்திரை அளவு நேரமும் மனம் மூச்சிலேயே பொருந்தி இருக்க வேண்டும். அப்படிப் பொருந்தி இருந்தால், அந்த நூற்று அறுபத்து ஆறு மாத்திரை அளவு நேரமும் சகசிரதளத்தில் மேல் வசிக்கும் சிவனின் அடியைச் சேர்ந்து இருக்கலாம்.

எதிரிட – பொருந்தி இருந்திட

மூன்று மடக்கு உடைப் பாம்பு

மூன்று மடக்குஉடைப் பாம்புஇரண்டும் எட்டுஉள
ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்
நான்றஇம் முட்டை இரண்டையும் கட்டியிட்டு
ஊன்றி யிருக்க உடம்பழி யாதே – 728

விளக்கம்:
மூன்று வளைவுகளைக் கொண்ட குண்டலினியாகிய பாம்பு இடைகலை, பிங்கலை ஆகிய இரண்டும் துணை கொண்டு சகசிரதளத்தை எட்டி விடும். சிரசிற்கு மேல் பிராணன் பன்னிரெண்டு அங்குலம் நீளும்படியாக, இடைகலை, பிங்கலை ஆகிய முட்டுக்கால்களை உறுதியாகக் கட்டி யோகத்தில் ஊன்றி இருந்தால், இந்த உடலுக்கு கேடு ஏதும் விளையாது.

ஏன்ற இயந்திரம் – ஏற்றுக்கொள்ளும் இயந்திரம்
முட்டு இரண்டையும் – முட்டுக்கால்

பிராணாயாமத்தினால் கபம், வாதம், பித்தம் நீங்கும்

அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில்
செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே – 727

விளக்கம்:
மனத்தூய்மையோடு பிராணாயாமம் செய்து வந்தால் மனமும் உடலும் குளுமை என்னும் மந்திரமை கிடைக்கப்பெறும் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். அக்குளுமையுடன் மாலை நேரத்தில் பிராணாயாமம் செய்து வந்தால், உடலில் உள்ள கபம் நீங்கும். மதிய நேரம் பிராணாயாமம் செய்து வந்தால், வஞ்சகம் கொண்ட வாதம் நீங்கும். செம்மையான விடியற்காலை நேரத்தில் பிராணாயாமம் செய்து வந்தால், உடலில் உள்ள பித்தம் அகலும். கபம், வாதம், பித்தம் ஆகியன அகலும் போது, இந்த உடலுக்கு நரை, மூப்பு ஆகியன இல்லாது போகும்.

ஐ – கபம்
செஞ்சிறு காலை – செம்மையான விடியற்காலை

மனத்தை சுத்திகரிப்போம்

சுழற்றிக் கொடுக்கவே சுத்தி கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே – 726

விளக்கம்:
மனத்தில் உள்ள அசுத்தங்களை எல்லாம் கழற்றி விட்டு, பிராணாயாமத்தில் பூரித்து இருந்தால் உடலும் சுத்திகரிக்கப்பட்டு தூய்மை பெறும். தூய்மையான மனத்தோடு, மூச்சுக்காற்றை சுழற்றி பிராணாயாமம் செய்ய வல்லவர்கள் உடலும் மனமும் வெப்பம் குறைந்து குளுமை பெறுவார்கள். அக்குளுமை இறைவனைக் காட்டும் மந்திர மையாய் அமையும்.

சுத்தி கழியும் – அழுக்குகள் நீங்கும்
கழற்றி மலத்தை – அசுத்தங்களை நீக்கி
அழற்றித் தவிர்ந்து – வெப்பம் நீங்கி
அஞ்சனம் – மறைபொருள் காட்டும் மந்திர மை

நம்முடைய உடல் ஒரு கோயில்

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே – 725

விளக்கம்:
யோகப்பயிற்சி செய்வதற்கு முன்பு, இந்த உடலை இழுக்காக நினைத்து அதை சரியாக பராமரிக்காமல் இருந்து வந்தேன். யோகப்பயிற்சியின் போது, இந்த உடலுக்குள் தானாக வந்து சேர்ந்த இறைபொருள் ஒன்று இருப்பதை உணர்ந்தேன். என்னுடைய உடல், உத்தமனான சிவபெருமான் குடியிருக்கும் கோயில் என்பதை நான் புரிந்து கொண்டதால், இப்போது உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்கிறேன். அதற்கான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்கிறேன்.

உறுபொருள் – தானாக வந்து அமர்ந்த இறைபொருள்

ஞானம் பெற உடல் உறுதி முக்கியம்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே – 724

விளக்கம்:
நம்முடைய உடல் நோயினால் வருந்தினால், உயிரும் சேர்ந்து வருந்திக் கஷ்டப்படும். உடலும் உயிரும் அவதிப்படும் வேளையில் மெய்ஞ்ஞானம் அடையும் வழியான அட்டாங்கயோகத்தை பயில்வது கடினம். அதனால் நம் உடலை உறுதிப்படுத்தும் வழிகளைப் பின்பற்றி உடலை வலிமையாக வைத்துக் கொள்வோம். உடல் உறுதியாக இருந்தால் உயிரும் உறுதியாக இருக்கும், யோக வழியில் தொய்வில்லாமல் நிற்கலாம்.

அழியில் – வருந்தினால்

error: Content is protected !!