நந்தி பெருமான் அருள் பெற்ற குருநாதர்கள் யார் யாரெல்லாம் என்று பார்த்தால் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர். இவர்களுடன் சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய நால்வருடன் சேர்த்து மொத்தம் எட்டு பேருமாகும்.
அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே. – (திருமந்திரம் – 66)
சிவபெருமான் பந்தங்களிலிருந்து பற்றை நீக்கும் முறையையும், இறைவனின் திருவடியில் பற்று வைக்கும் விதத்தையும் ஆகமங்களின் மூலமாக நமக்கு அருளினான். மேலும் அவ்வாகமங்கள் கண் இமைத்தல் ஒழித்து உயிர் போகின்ற முறையையும் சொல்லித் தருகின்றன. தமிழ் மொழி மற்றும் வடமொழி ஆகியவற்றில் உள்ள இந்த ஆகமங்கள் மூலமாக நாம் இறைவனை உணரலாம்.
ஊழிக்காலத்தில் மழைக்காலம், கோடைக்காலம் எல்லாம் நின்று எங்கும் ஒரே பனி மயமாக இருந்தது. ஏரிகளில் எல்லாம் நீர் ஓடாமல் நின்று விட்டது. அந்த ஊழிக்காலத்தில் சிவபெருமான் ஆகமங்களை அன்னை பராசக்திக்கு சமஸ்கிருதத்திலும் தமிழிலும் அருளினான்.
சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே. – (திருமந்திரம் – 62)
இருபத்தெட்டு ஆகமங்களுள் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை. அவற்றை சிவமான பரம்பொருளிடம் இருந்து சத்தியும் சதாசிவமும், உள்ளத்துக்கு உகந்த மகேசர், உருத்திரர், தவம் செய்த திருமால், நான்முகன் ஆகியோர் பெற்றார்கள். இவர்களோடு நந்தியம்பெருமானும், அந்த ஒன்பது ஆகமங்களைத் தான் பெற்று நமக்கு உரைத்தான்.
பரனாய் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. – (திருமந்திரம் – 61)
சிவபெருமான் ஆகமங்களின் மூலமாக பரம்பொருளை காட்டி அருளினான். அவனே இந்த உலகைத் தாங்கி நின்று சிவதர்மத்தை போதிக்கிறான். தேவர்கள் வணங்கி வழிபடும் அந்த நந்திபெருமான் ஆகமங்களில் அறிவாய் விளங்குகிறான்.
சிவபெருமான் அருளிய தெய்விக ஆகமங்கள் விண்ணில் வாழும் தேவர்களும் புரிந்து கொள்ள அரிதான பொருள்கள் உடையவை. அவற்றை எண்ணிப் பார்த்தால் எழுபது கோடி நூறாயிரம் வரும். அப்பொருள்களை அறிந்து கொண்டாலும் அவை அனுபவத்தில் வரா விட்டால், அவையெல்லாம் நீர் மேல் எழுதப்பட்ட எழுத்து போல் பயன்படாமல் போகும்.
பண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. – (திருமந்திரம் – 59)
பண்டிதர் என்பவர் பதினெட்டு மொழிகளிலும் கூறப்பட்டுள்ள ஆகமங்களின் பொருள் தெரிந்தவராக இருக்க வேண்டும். பதினெட்டு மொழிகளிலும் பண்டிதர்கள் எழுதிய பொருள், அண்டங்களுக்கு முதல்வனான சிவபெருமானால் என்ன பொருளில் உபதேசிக்கப் பட்டதோ அவ்வாறே இருக்க வேண்டும்.
சிவபெருமான் அருளிய ஆகமங்கள் எண்ணிக்கையில் இருபத்தெட்டு ஆகும். ஆனால் அதில் உள்ள பொருள்கள் இருபத்தெண் கோடி நூறாயிரம், அதாவது அந்த ஆகமங்கள் அளவில்லாத பொருள் உடையவையாகும். தேவர்களால் பெருமையாக சொல்லப்பட்ட அந்த ஆகமங்களின் பொருள் உணர்ந்து நம் சிவபெருமானை வணங்குவோம்.
விளக்கம்
கருமை நிறம் கொண்ட உமையம்மையை தன்னுடைய ஒரு பாகமாகக் கொண்டவன் சிவபெருமான். அந்த சிவபெருமான் அருள் செய்த ஆகமங்கள் மொத்தம் இருபத்து எட்டு. ஈசனுக்கு மொத்தம் ஐந்து முகங்கள் உண்டு. ஐந்தாவது முகம், ஈசான முகம் என்று சொல்லப்படும். இருபத்து எட்டு ஆகமங்களையும் அருள் செய்தது, உச்சி நோக்கி இருக்கும் அந்த ஐந்தாவது முகம் ஆகும். அந்த ஆகமங்களை நேரடியாகக் கேட்கப் பெற்றவர்கள் அறுபத்து ஆறு பேர்.