யோகத்தின் எல்லை: தெளிந்த சிவநீர் தரும் அழியா வாழ்வு

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறு நமனுமங் கில்லையே – 848

விளக்கம்:
யோக நெறியில் நின்று பயிற்சி செய்பவர்கள், தமது குறுகிய காலப் பயிற்சியில் ‘சிவநீர்’ (அமுத ஊற்று) சுரக்கத் தொடங்கிய முதல் நிலையிலேயே, “இதுதான் யோகத்தின் எல்லை” என்று மதியிலாமல் அங்கேயே நின்று விடுகிறார்கள்.

முதலில் ஊறும் அந்தச் சிவநீர் நுரை மற்றும் திரைகளுடன் (அசுத்தங்களுடன்) கூடிய உப்பு நீராக இருக்கக்கூடும். ஆனால், யோகப் பயிற்சியில் மென்மேலும் ஆழ்ந்து செல்பவர்கள், அந்த நுரைகளை நீக்கித் தெளிந்த சிவநீரைப் பருகும் ஆற்றலைப் பெறுவார்கள்.

ஆற்றின் கரை அருகே நின்று கலங்கிய நீரைப் பருகுவதற்கும், ஆழத்திற்குச் சென்று தெளிந்த நீரைப் பருகுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ஆழ்ந்த யோக நிலையில் தெளிந்த சிவநீரைப் பருக வல்லவர்களுக்கு:

  • நரைமுடி மீண்டும் கருமையாகும்.

  • திரை (கண் மறைப்பு/முதுமைத் தளர்ச்சி) நீங்கிப் பார்வை தெளிவடையும்.

  • காலன் (எமன்) அணுகாத நீடித்த ஆயுள் கிட்டும்.

முடிவுரை:
யோக அனுபவம் என்பது ஒரு மகா கடல் போன்றது. அதைக் கரையருகே நின்று வேடிக்கை பார்க்காமல், பயிற்சியால் உள்ளே இறங்கி நீந்தி, பேரானந்தம் எனும் அமுதத்தைப் பெறுவோம்.

வரை – எல்லை, உவரி – கடல்/உப்பு நீர், நமன் – எமன்/மரண பயம்.

சிவநீர் தாரணையும் நரைநீக்கமும்

நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே – 847

விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் நின்று, தலை உச்சியில் மனத்தை நிறுத்தி தியானம் செய்யுங்கள். தலை உச்சியில் உள்ள சகசிரதளத்தில் மனம் குவியும் போது, அந்த வெளி இளகி சிவநீர் ஊறும், அதனை நுகருங்கள். ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் சகசிரதளத்தில் ஊறும் அந்நீருக்கு இணையான சிறந்த மருந்து வேறு ஒன்றில்லை. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் தங்கள் கவனத்தை தலை உச்சியிலேயே நிறுத்தி நிலை பெறச் செய்வார்கள். அமுரி எனப்படும் இந்தச் சிவநீரை தாரணை செய்பவர்களுக்கு கருத்த மறுமயிர் முளைப்பதைக் காணலாம்.

நூறு மிளகு நுகரும் – நூறும் + இளகும் + நுகரும், சிவத்தினீர் – நம் தலை உச்சியில் ஊறும் சிவநீர்

தெளிதரும் சிவநீர்

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங்
களிதருங் காயங் கனகம தாமே – 846

விளக்கம்:
யோகப்பயிற்சியால் உடலில் உண்டாகும் அமுரி என்னும் அமுதத்தை நுகர்ந்து வந்தால் சித்தம் தெளிவு பெறும். இவ்வரிய நிலையை தாரணை செய்து ஓராண்டு தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் சிவ ஒளியைக் காணலாம், குறைவில்லா வாழ்வு கிடைக்கும். இந்நிலையில் இன்னும் நீடித்து நின்று, எட்டு ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் மனம் ஒடுங்கி ஒரு நிலையில் நிற்கும், மட்டில்லா மகிழ்ச்சி பெறலாம், நம்முடைய உடல் பொன் போன்று பிரகாசம் பெறும்.

சிவநீர்  – யோகப்பயிற்சியால் உடலில் உண்டாகும் அமுதம், வளி – காற்று, களி – மகிழ்ச்சி, கனகம் – தங்கம்

கடலின் நடுவே ஒரு கிணறு!

உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலு மாமே – 845

விளக்கம்:
இது அமுரி தாரணை என்னும் தலைப்பில் வரும் முதல் பாடலாகும். அமுரி என்பது தொடர்ந்த யோகப்பயிற்சியால் உடலில் உண்டாகும் அமுதம். மிக அரிதாக சுரக்கும் அவ்வமுத நிலையை தொடர்ந்து நிலைநிறுத்தும் யோகப்பயிற்சியைப் பற்றி அமுரி தாரணை பேசுகிறது.

அமுரி என்னும் அமுதம் கிடைப்பது மிக அரிதான விஷயமாகும். அத்தனைப் பெரிய கடலின் நடுவே ஒரு சின்னஞ்சிறிய கிணறு, அந்தக் கிணற்றில் இருந்து நீர் இறைப்பதற்கு ஒப்பானதாகும் யோகப்பயிற்சியால் அமுதம் சுரக்கச் செய்வது. உடலுக்கு உறுதி தரும் அமுரி சுரக்க, ஒரே ஒரு வழி தான் உண்டு. நம் மனத்தை சுழுமுனையில் நிறுத்தி தொடர்ந்து யோகப்பயிற்சி செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், நமது உயிர் துன்பத்தில் வதைப்படாமல் சிவபெருமானின் திருவடியை நாடி நிற்கும்.

அமுரி – யோகப்பயிற்சியால் உடலில் உண்டாகும் அமுதம், தாரணை – நிலை நிறுத்துதல், நடலை – துன்பம்

கேள்விப்படாத பூ ஒன்று உண்டு!

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே – 844

விளக்கம்:
பரியங்கயோகத்தினால் கிடைக்கும் முக்கிய பலன் என்னவென்றால், நம் தலை உச்சியின் சகசிரதளத்தில் சிவ சக்தி சேர்க்கையினால் அங்கே ஆயிரம் இதழ் கொண்ட தாமரை ஒன்று மலர்வதை நாம் உணரலாம். நாம் இதுவரை கேள்விப்படாத அந்த தாமரை மலர நிலமும் தேவையில்லை, நீரும் தேவையில்லை. அத்தாமரைக்கு அரும்புமில்லை, வேருமில்லை. சூரிய ஒளியோ சந்திர ஒளியோ இல்லாமலேயே ஒளி வீசும் தன்னொளி கொண்டது, நமது தலை உச்சியில் உள்ள சகசிரதள தாமரை. அந்தத் தன்னொளிக்கு கீழ் திசை என்பதோ மேல் திசை என்பதோ கிடையாது, முழுமையான ஒளி அது.

பங்கயம் – தாமரை, தார் – அரும்பு, ஊர் – சூரிய ஒளி

இதம் தரும் பராசக்தி

உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்க்கடிந் தாளே – 843

விளக்கம்:
ஒரு சுழலின் உள்ளே அகப்பட்டாற் போல, யோக நிலையின் கும்பகத்தில் நின்று தன்னைத் தானே ஆகுதி செய்யும் யோகிகளுக்கு முதுமை என்பதே கிடையாது. கறுத்த தலைமயிருடன் எப்போதும் இளமையாக இருப்பார்கள். நம்முள்ளே குடியிருக்கும் பராசக்தி என்றும் நமக்கு துணை இருந்து இதம் தருவாள். நம்முடைய யோகநிலையின் பக்குவம் அறிந்து, நம்மை இந்த உலக பந்தத்தில் இருந்து விடுவிப்பாள்.

உதம் – தன்னை ஆகுதி செய்தல் (ஹிதம் என்பதன் திரிபு), ஒரு சுழி – சுழல் போன்ற ஒரு ஆன்மிக நிலை, கதம் – ஓட்டம், பதம் – பக்குவம்

தன்னைத் தானே ஆகுதி செய்தல்

வாங்க இறுதலை வாங்கலில் வாங்கியே
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளர் தாம்
ஓங்கிய தம்மை உதம்பண்ணி னாரே – 842

விளக்கம்:
பிராணாயாமப் பயிற்சியில் பூரகம், ரேசகம் ஆகியவற்றிற்கு இடையே நன்றாக இழுத்த மூச்சை கும்பகத்தில் நிறுத்தும் உபாயம் அறிந்தவர் இங்கு மிகவும் குறைவு. மூச்சை நன்கு உள்ளே இழுத்து கும்பகத்தில் நிறுத்தும் உபாயம் அறிந்து, அதனைப் பயிற்சி செய்பவர் உயர்ந்த நிலையை அடைந்து, தன்னைத் தானே சிவபெருமானுக்கு ஆகுதி செய்கிறார்.

வாங்கல் – பூரகம் என்னும் மூச்சை உள்ளிழுத்தல், இறுதல் – ரேசகம் என்னும் மூச்சை வெளியே விடுதல், வீங்க வலிக்கும் – மூச்சை நன்றாக இழுத்து கும்பகத்தில் நிறுத்துதல், விரகு – உபாயம், உதம் – தன்னை ஆகுதி செய்தல் (ஹிதம் என்பதன் திரிபு)

மின்னிடையாளும் மின்னாளனும்!

மின்னிடை யாளும்மின் னாளனுங் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லாரேல்
மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே – 841

விளக்கம்:
பரியங்கயோகத்தில் நின்று, மின்னிடையாளான பராசக்தியையும் மின்னாளனான சிவபெருமானையும் துவாதசாந்த வெளியில் கூடச் செய்வோம். அந்நிலையில் நம் மனத்தை சிரசின் மேலேயுள்ள துவாதசாந்த வெளியில் நிலையாக நிறுத்தி தொடர்ந்து தியானம் செய்தால் இந்த உலகத்தில் நாம் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழலாம்.

மின்னிடையாள் – பராசக்தி, மின்னாளன் – சிவபெருமான், பொன்னிடை வட்டம் – துவாதசாந்தம்

மின்னிடையாள்!

மேலாந் தலத்தில் விரிந்தவர் ஆரென்னில்
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலாம் நிலத்தின் நடுவான அப்பொருள்
மேலா வுரைத்தனர் மின்னிடை யாளுக்கே – 840

விளக்கம்:
பரியங்கயோகத்தில் நின்று, மேலாந்தலமான துவாதசாந்தம் என்னும் வெளியை அறிவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கு முன்பு இந்நிலையை அறிந்தவர் யாரெல்லாம் என்று பார்த்தால் – திருமால், பிரமன், நந்திதேவர் ஆகியோர் ஆவர். இதிலிருந்தே நாம் பரியங்கயோகத்தின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம். யோகத்தின் உயர்நிலையான துரியநிலையின் நடு நாயகரான சிவபெருமான் நம்முடைய பரியங்கயோக சிரத்தையை உணர்வார், தம்முடன் சேரும் மின்னிடையாளான பராசக்தியிடம் நம்முடைய யோகப்பயிற்சியின் மேன்மையை எடுத்துச் சொல்வார். இதனால் நமக்கு சிவபெருமான் அருளுடன், பராசக்தியின் அருளும் கிடைக்கும்.

மேலாந்தலம் – சிரசின் உச்சியில் விளங்கும் துவாதசாந்தம், மால் – திருமால், திசைமுகன் – பிரமன், நாலாம் நிலம் – துரியம், மின்னிடையாள் – பராசக்தி

வெளியின் ஓளி!

வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறிவின் உளிமுறி யாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேலறி யேனே – 839

விளக்கம்:
முந்தையப் பாடலில், தொடர்ந்த யோகப்பயிற்சியால், துவாதசாந்தம் என்னும் வெளியை அறியலாம் என்பதைப் பார்த்தோம். பரியங்கயோகத்தின் போது, சிரசின் மேலே சிவசக்தியர் ஒன்று கூடும் போது அங்கே துவாதசாந்த வெளியில் ஒளியைக் காணலாம். வெளியில் ஒளியைக் கண்டவர், குறைவில்லாத அறிவுக்கூர்மை பெற்றுத் தெளிவை அடைவார். மேன்மை மிகுந்த நந்தி அருளாலே, பரியங்கயோகத்தில் நின்று, வெளியின் ஒளியைக் காண்பதை விட சிறந்த பேறு வேறு எதுவும் இல்லை.

அறிவின் உளி – அறிவின் கூர்மை, செழுநந்தி – மேன்மை மிகுந்த நந்தி