உடல் தரும் துன்பம் நீங்க …

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒருங்கவல் லார்களுக்
கொன்பது வாசல் உலைநல மாமே. – (திருமந்திரம் – 658)

விளக்கம்:
ஒன்பது வாசல்களைக் கொண்ட இந்த உடல் கொதிக்கும் உலை போல் துன்பப்படுகிறது. நம் உடலின் ஒன்பது நாடிகள் ஒருங்கே கூடும் சுழுமுனையில் மனம் செலுத்தி தொடர்ந்து தியானம் செய்து வந்தால், துன்பம் தரும் இந்த உடல் இன்பம் தருவதாக அமையும்.

நாடித்துடிப்பு இருக்கும் வரையில் சிவனை நினைப்போம்!

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே. – (திருமந்திரம் – 657)

விளக்கம்:
ஈசன், திருமால், பிரமன் ஆகியோர், என்றும் சுடர் விடும் சோதியான நம் சிவபெருமானை கண நேரமும் விடாமல் தியானம் செய்கிறார்கள். நாமும் நம் கண்ணிலும் இருதயத்திலும் நாடியின் ஓசையை உணர்ந்திருக்கும் வரை அந்தச் சுடர் விடும் சோதியை நம் சிந்தையில் இடையறாது நிறுத்துவோம்.

கூர்மன் என்னும் காற்று

கண்ணில் வியாதி உரோகந் தனஞ்சயன்
கண்ணில்  இவ்்வாணிகள் காசம் அவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே. – (திருமந்திரம் – 656)

விளக்கம்:
கண்ணில் ஏற்படும் வீக்கத்திற்கு தனஞ்சயன் என்னும் வாயு சரியாக இயங்காதது காரணம் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். கண் வீக்கத்திற்கு மட்டும் தான் தனஞ்சயன் காரணம் ஆனால் ஆராய்ந்து பார்த்தால் கண்ணில் ஏற்படும் ஆணிகளுக்கு தனஞ்சயன்  காரணம் இல்லை. கண்ணில் கூர்மன் என்னும் காற்று சரியாகப் பொருந்தாவிட்டால் கண்ணின் நரம்பு பாதிக்கப்படும். அதனால் கண்ணில் பார்வைக் குறைபாடு ஏற்படும்.

தனஞ்சயன் சரியாக இயங்கா விட்டால் …

வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனும் முடமுமாம்
வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே. – (திருமந்திரம் – 655)

விளக்கம்:
தனஞ்சயன் என்னும் காற்று நீங்கினால் நம் உயிர் நீங்கி விடும் என்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம். தனஞ்சயன் சரியாக இயங்காவிட்டால் ஏற்படும் நோய்களை இந்தப் பாடல் சொல்கிறது. தனஞ்சயன் சரியாக இயங்காவிட்டால், உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் கட்டி, சிரங்கு, குட்டம், சோகை, வாதம், கூன், முடம், கண்ணில் ஏற்படும் வீக்கம் ஆகிய நோய்கள்  ஏற்படலாம்.

தனஞ்சயன் இல்லையென்றால் உயிர் இல்லை!

இருக்குந் தனஞ்சயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து நான்கின்
இருக்கு முடலி லிருந்தில தாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே. – (திருமந்திரம் – 654)

விளக்கம்:
நமது உடலில் இருக்கும் ஒன்பது வாயுக்களோடும் தனஞ்சயன் என்னும் காற்று பொருந்தியிருக்கிறது. தனஞ்சயன் என்னும் காற்று இல்லாவிட்டால் இந்த உடலில் உயிர் இல்லை என்று அர்த்தம். தனஞ்சயன் நீங்கிய உடல் அழுகத் தொடங்கி விடும். இருநூற்று இருபத்து நான்கு உலகங்களிலும் இது தான் நடைமுறை.

தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று

ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே. – (திருமந்திரம் – 653)

விளக்கம்:
நமது உடலில் ஒன்பது வாயுக்கள் ஒன்றுகொன்று சேர்ந்திருந்து இயங்குகின்றன. அவை பிராணன், அபானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், உதானன் ஆகியன ஆகும். இந்த ஒன்பது காற்றுக்களோடு தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று சேர்ந்து இயங்கினால் தான் நம்முடைய உடலும் உயிரும் சேர்ந்திருக்கும்.

சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே!

சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தின் திருநடத் தோரே. – (திருமந்திரம் – 652)

விளக்கம்:
சிவத்தைப் பற்றியே நினைத்திருந்து சித்தமெல்லாம் சிவமயம் ஆகிய சிவமுத்தர் மௌனமே முத்தி அடையும் வழி என்னும் உண்மையை உணர்ந்தவர்கள். அவர்கள் ஐம்புலன்களின் தொடர்பையும் அறுத்து எறிந்து மனம் சுத்தம் பெற்றவர்கள். சுத்தம் பெற்ற அவர்களின் சித்தமெல்லாம் சிவபெருமானின் திருநடனமே நிறைந்திருக்கும். அந்நடனத்திலேயே அவர்கள் மனம் லயித்திருப்பார்கள்.

தினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்

முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வார்வலர்
உந்தியுள் நின்று உதித்தெழு மாறே. – (திருமந்திரம் – 651)

விளக்கம்:
இத்தனை காலமும் தினமும் காலை வானம் வெளிச்சம் பெற்று விடிகிறது. அன்றைய நாழிகைக் கணக்கு ஆரம்பிக்கிறது. ஆனால் நமக்கு அந்நேரம் ஆன்மிகச் சிந்தனை வருவதில்லை. நாம் தினந்தோறும் அதிகாலையில் மண் முதலான பஞ்ச பூதங்களோடு மனம் ஒன்றித் தியானம் செய்ய வேண்டும். அப்படி தினமும் செய்து வந்தால் சுவாதிட்டானம் எனப்படும் கொப்பூழ் பகுதியில் இருந்து குண்டலினி மேலெழுவதை உணரலாம்.

சித்தியை விட முக்தியே சிறந்தது!

தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை
யாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்
கோங்கி வரமுத்தி முந்திய வாறே. – (திருமந்திரம் – 650)

விளக்கம்:
அட்டாங்க யோகத்தில் நிற்கும் யோகி அணுவின் தன்மையான அணிமா எனும் சித்தியையும், உலகத்தின் மொத்த உயிர்களையும் தாங்கி நிற்கும் தன்மையான மகிமா எனும் சித்தியையும்  அடைகிறார். அவற்றைப் பெறுவதில் குறை ஏதும் இல்லை. ஆனால் இந்தச் சித்திகள் வந்து சேர்வதற்கு முன்பே அட்டாங்க யோகத்தின் போது ஓம் என்னும் நாதம் எழுந்து சகசிரதளத்தை அடைந்து முக்தி வந்து சேரும். சித்தி பெறுவதை விட முக்தி பெறுவதே சிறந்ததாகும்.

அட்டமா சித்திகள்!

தானே அணுவுஞ் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகமுந்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே. – (திருமந்திரம் – 649)

விளக்கம்:
அட்டாங்க யோகத்தை பயில்வதால் நாம் அடையும் எட்டுச் சித்திகள் இவையாகும்.

1. அணிமா – அணுவைப் போல நுட்பமான உடல் ஆதல்
2. மகிமா – உலகளவு பெரிய உருவம் கொள்ளுதல்
3. கரிமா – அளவிட முடியாத கனம் கொள்ளுதல்
4. இலகிமா – வானத்தைப் போல லேசாக இருத்தல்
5. பிராத்தி – அழியாத உடலைப் பெறுதல்
6. பிராகாமியம் – பிற உடலில் புகுதல்
7. ஈசத்துவம் – மேம்பட்ட நிலையை அடைதல்
8. வசித்துவம் – யாவரையும் தன்வயப் படுத்துதல்

error: Content is protected !!